Wednesday, December 30, 2009

33வது சென்னை புத்தகக் கண்காட்சி

33வது சென்னை புத்தகக் கண்காட்சி புதன்கிழமை (நேற்று) துவங்கியது. முதல்வர் கருணாநிதி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 10ம் தேதி வரை ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் (பூந்தமல்லி) நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரில் நடைபெறுகிறது.
இந்த புத்தகக் கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் ராம லட்சுமணன் பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜகான் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:
கண்காட்சி அரங்கம் 1 லட்சத்து 75ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 5 வாயில்களுடன் 606 அரங்குகளில் 360 புத்தக நிறுவனங்கள் பங்க கொண்டு 6 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைச் செய்யப்படுகின்றன.
கண்காட்சி நாள்தோறும் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த கண்காட்சி நடைபெறும். நுழைவுக் கட்டணம் ரூ. 5 நுழைவு வாயில்களிலும் டிக்கெட் கவுண்டர் உள்ளது. மாணவர்களுக்கு இலவச அனுமதி சென்னை மற்றும் சுற்றுப்பகுதி பள்ளி மாணவர்களுக்காக 5 லட்சம் இலவச அனுமதி டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
நாள் தோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் 6 மண முதல் 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், இலக்கிய சொற்பொழிவுகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஜன-7ம் தேதி புரசைவாக்கம் அழகப்பா மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கூட மாணவர்களுக்கும், ஜன-8ம் தேதி ராணிமேரி கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுபோட்டி நடத்தி ரூபாய் 1000 முதல் ரூபாய் 5,000 வரை ரொக்கம், மாணவர்கள் விரும்பும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். அதேபோல 9ம் தேதி புத்தகக்காட்சி வளாகத்தில் 6 முதல் 13 வயது மாணவர்களுக்கு 3 பிரிவுகளில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
கண்காட்சிக்கு வருகை தரும் வாசகர்களின் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர், சிற்றுண்டி, கழிப்பிட வசதிகள் என 5 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் புத்தகங்களை வாங்க கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம்.
புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்களிடையே மனித நேயத்தையும் விழிப்புணர்வையும் உருவாக்க ரத்ததான முகாம். ரத்த சர்க்கரை பரிசோதனை முகாமும் நடைபெறுகிறது. 5லட்சம் சதுர அடி பரப்பளவில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு சுமார் 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விருது வழங்கும் விழா:
30வது புத்தகக் கண்காட்சி நடந்தபோது, முதல்வர் கருணாநிதி நன்கொடையாக வழங்கிய ரூபாய் 1 கோடி மூலம் கிடைத்த வங்கி வருமானத்தல் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை வைப்புத் தொகை மூலம் கிடைத்த வட்டி வருவாயைப் பயன்படுத்தி 6 எழுத்தாளர்களுக்கு தலா ரூபாய். 1 லட்சம் பொற்கிழியுடன் பாராட்டுச் சான்றிதழும் முதல்வரால் வழங்கப்பட உள்ளது.
இந்த விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்கள் வருமாறு: கட்டுரை - ச.வே. சுப்பிரமணியன், கவிதை - ஈரோடு தமிழன்பன், நாடகம் - ஆறு அழகப்பன், சிறுகதை - கு. சின்னப்ப பாரதி, தெலுங்கு இலக்கியம் - அபுரி சாயாதேவி, ஆங்கில இலக்கியம் - சோ.ந.கந்தசாமி. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் வழங்கும் பல்வேறு விருதுகளைப் பெற ஒ.ஆர்.சுரேஷ், வே.சுப்பையா, நா.தர்மராஜன்,குழ.கதிரேசன், எம்.முத்துசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-ஹேமா

Tuesday, December 29, 2009

ஆந்திர கவர்னர் நாராயண் தத் திவாரியின் செக்ஸ் விவகாரம்.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதை மத்திய அரசு ஒத்தி வைத்ததைக் கண்டித்து ஆந்திராவில் ஒரு பக்கம் கலவரம் நடந்துக் கொண்டிருக்கும் வேலையில் ஆந்திர கவர்னர் நாராயண் தத் திவாரியின் செக்ஸ் விவகாரம். மறுபக்கம் ஆந்திர மாநிலத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது.
தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப் போவதில்லை என்று மத்திய அரசு கூறியது. இதை தொடர்ந்து தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் 70 எம்.எல்.ஏக்களும் 13 ஆந்திர அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினமா செய்துள்ளனர். இந்த நிலையில் ராஜினாமா செய்த அமைச்சர்களின் 9 பேர் டில்லி சென்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் மூகர்ஜியை சந்தித்து உடனே தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தனி மாநில கலவரத்தில் இறங்கிய பொதுமக்களும் மாணவர்களும் 150க்கும் மேற்பட்ட பஸ்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதற்கிடையில் 2 ரயில் நிலையங்கள் தீ வைக்கப்பட்டடுள்ளன. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த 8 மாணவர்களை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இப்படி எரியும் ஆந்திராவில் எந்த பிரச்சனையையும் கவனிக்க நேரமில்லாமல் இளம் பெண்களுடன் உல்லாசத்தில் ஆந்திர கவர்னர் திவாரி.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்தான் இந்த என்.டி.திவாரி (வயது 86) 1980, 90களில் இந்திய அரசியலின் உச்சத்தில் இருந்தவராம். ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு 1991ல் இவர்தான் பிரதமராவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டவர். அப்போது நடந்த தேர்தலில் 800 ஒட்டுகளில் தோல்வி அடைந்தால் அவரால் அந்த உயரிய பதவிக்கு வரமுடியவில்லை. இந்திய அரசியல் தலைவர்களில் 2 மாநிலங்களில் முதல்வராக இருந்த ஒரே நபர் என்ற சிறப்பும் இவருக்கு இருக்கு. 1976 முதல் 1986 வரை உத்தரபிரதேச முதல்வராக 3 தடவையும், உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டபோது அம்மாநில முதல்வராக 2002 முதல் 2007 வரை இருந்தார். ராஜீவ்காந்தி ஆட்சியில் நிதி, வர்த்தகம், வெளியுறவுத்துறை என பல முக்கிய பதவிகளில் இருந்தவர்.
கடந்த ஆண்டு அவர் ஆந்திரா கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆந்திர ஜோதி, ஏபிஎன் தொலைக்காட்சி சானல் கவர்னர் திவாரி 3 பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த செக்ஸ் காட்சிகளை பல தடவை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பியது. திவாரியின் சொந்த மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ராதிகா என்ற பெண் காண்டிராக்டர் ஆந்திராவில் சில கனிம சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்க கவர்னரின் தயவை நாடி.னார். ஆனால் திவாரி ஏமாற்றியதால் இந்த 3 பெண்களையும் செக்ஸ் உல்லாசத்தின் போது மைக்ரோ கேமராவையும் கேமரா செல்போனையும் வைத்து கவர்னர் லீலையை பதிவு செய்ததாக ராதிகா கூறினார். இந்த தகவல்களை கேட்டதும் ஆந்திர மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.
ஏற்கனவே ரோகித் சர்மா என்ற வாலிபர் என் தந்தை என்.டி.திவாரி என்று கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்தினார். அவர் தொடந்த வழக்கை டில்லி கோர்ட்டு சமீபத்தில் தான் தள்ளுபடி செய்துள்ளது.
இது தவிர முறையற்ற பல திருமணங்களை செய்து கொண்டதாக இவர் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் இருக்கிறது. 85 வயதிலும் சபலத்தை விடாதவராகவும் கவர்னர் மாளிகையை மன்மதலீலைகளில் அரங்கமாகவும் பயன்படுத்தி இவர் கடைசியில் மைக்ரோ கேமரா மூலம் வசமாக சிக்கிக் கொண்டார்.
நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை எழுப்பிய இந்த காட்சி ஏ.பி.என். ஆந்திர ஜோதி என்ற தெலுங்கு சேனல் ஒளிபரப்பியதை அடுத்து ஒரு மணி நேரத்தில் ஆந்திர ஐகோர்ட்டில், இந்த காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என கவர்னர் மாளிகை சார்பில் தடை உத்தரவு பெறப்பட்டது.
ஆனால் செக்ஸ் புகாரில் சிக்கிய கவர்னரின் லீலைகளை பார்த்த மக்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போரட்டத்தல் ஈடுபட்டனர். இதில் அவருடைய உருவபொம்மை எரிக்கப்பட்டும். அவருக்கு எதிராக அனைத்து கட்சித் தலைவர்களும் போராட்டத்தல் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில், உடல் நிலத்தை கருத்தில் கொண்டு பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆந்திர கவர்னர் திவாரி கடித்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய கவர்னராக இருந்து வரும் இக்காடு சீனிவாசன் லஷ்மி நரசிம்மன் கூடுதலாக ஆந்திர மாநிலத்தை கவனிப்பார் என ராஷ்ட்டிரபதிபவன் வட்டாரம் கூறியுள்ளது.

Sunday, December 27, 2009

புலம்ப வைக்கும் போக்குவரத்து

புலம்ப வைக்கும் போக்குவரத்து
அன்றாட அவசியத் தேவையாகிவிட்ட பேருந்து போக்குவரத்து - குறிப்பாக அரசுப் போக்குவரத்து - தமிழகத்தில் எப்படி இருக்கிறது? மக்களின் அனுபவம் என்னவாக இருக்கிறது?
தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்து, விரைவு போக்குவரத்து, கோவை கோட்டம், மதுரை கோட்டம், கும்பகோணம் கோட்டம், விழுப்புரம் கோட்டம், சேலம் கோட்டம் என ஏழு அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. அவை சார்ந்த 19 போக்குவரத்துக் கழக மண்டலங்களின் கீழ் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. கிட்டத்தட்ட 1,25,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஒரு நாளுக்கு 80 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோ மீட்டர்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். நாளொன்றுக்குப் பயணக் கட்டணமாக வசூலாக அரசுக்கு 1.8 ஆயிரம் கோடி ரூபாய் வருகிறது.
விரைவுப் பேருந்துக் கட்டணம், புறநகர் பேருந்துக் கட்டணம், மாநகரப்பேருந்துக் கட்டணம், நகரப்பேருந்துக் கட்டணம் என நான்கு வகையான கட்டணங்கள் உள்ளன. இதில் எல்.எ°.எஸ், பாயிண்ட் டு பாயிண்ட், நான் ஸ்டாப் என்றெல்லாம் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சொகுசுப் பேருந்து, தற்போது குளு குளு பேருந்து என்றும் அதிகக் கட்டணப் பேருந்துகள் ஓடுகின்றன.
இவற்றிலாவது கட்டணமுறை என்ன என்பது புரிகிறது. அப்படி எதுவுமே புரியாத ஒரு கட்டண முறையும் இருக்கிறது. அண்மையில் ஒரு பயணி சென்னை காசி தியேட்டர் நிறுத்தத்தில் ஏறி, கிண்டியில் இறங்கினார். துரிதவண்டி பேருந்து அதற்கு ரூ. 3.00 கட்டணம் என நினைத்தால் ரூ. 4.50 வசூலிக்கப்பட்டது. ஏன் என்று நடத்துனரிடம் கேட்டபோது அவர், “இது ஜம்பிங் ஸ்டாப் கணக்கு” என்று சொல்லியிருக்கிறார். சத்தியமாக ஜம்பிங் ஸ்டாப் என்றால் என்ன என்று எந்தப் பயணிக்கும் புரியவில்லை.
சென்னையில் 1947ல் அரசின் 30 நகரப் பேருந்துகள் ஓடின. 1972ல் போக்குவரத்துக்கழகம் தொடங்கப்பட்டது. அப்போது அதில் 1029 பேருந்துகள் ஓடின. 1994ல் 2332 பேருந்துகளுடன் பல்லவன் போக்குவரத்துக் கழகம், அம்பேத்கர் போக்குவரத்து கழகம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 2001ல் மீண்டும் ஒரே பெருநகரப் போகுவரத்துக் கழகமாக மாறியது.
சென்னையில் 2005ஆம் ஆண்டு மொத்தம் இருந்த 2,500 பேருந்துகளில் 1500க்கு மேற்பட்டவை சாதாரணக் கட்டண வண்டிகளாக இருந்தன. ஆனால் இன்று சென்னையில் 25 டிப்போக்களில் 3,084 பஸ்கள் உள்ளன. இவற்றில் 600 மட்டுமே சாதாரணக் கட்டண பஸ்கள். மீதியுள்ள 2,484 பஸ்களிலும் வண்ணப் வண்ண பெயர்ப் பலகைகளைக் கொண்ட எல்.எஸ்.எஸ் (350), எம். சர்வீஸ் (700), டீலக்ஸ் (850), ஏ.சி. பஸ்கள் (30) என்ற எண்ணிக்கையில் தொடங்கி 100க்கும் மேற்பட்ட ஏ.சி. ப°கள் உள்ளன. இதில் அதிகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அவற்றின் முகப்பிலுள்ள பெயர்ப்பலகைகளை வைத்துத்தான் அவற்றின் தரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். பயணம் செய்து பார்த்தால் ஒரு சில புதிய வண்டிகளைத் தவிர மற்றதில் எந்த வித்தியாசமும் தெரியாது.
அப்பலகை வெள்ளை நிறமானால் அது சாதாபஸ். முதல் ஸ்டேஜ் கட்டணம் 2 ரூபாய். ஆனால் அதைப் பார்ப்பது மிகவும் அரிது. பலகை மஞ்சள் நிறமானால், குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நிற்கும். அதற்கு எல்.எஸ்.எஸ். பஸ் என்று பெயர். அதற்கு முதல் ஸ்டேஜ் கட்டணம் ரு. 2.50. அதிகமான மக்கள் இருந்தாலும் அந்த இடத்தில் நிற்காமல் போகும், அதுதான் இதன் சிறப்பு. பச்சை நிறப்பலகையானால் அது துரித வண்டியாம். அதன் முதல் ஸ்டேஜ் கட்டணம் ரூ.3.00. சென்னை போலப் போக்குவரத்து நெரிசல் நிறைந்த மாநகரில் இது எவ்வளவு துரிதமாகப் போக முடியும் என்பது ஓட்டுநருக்கும் தெரியாத ரகசியம்.
வெள்ளைப் பலகையிலேயே (எம்) என்று எழுதியிருக்கும். அதன் அர்த்தம் யாருக்கும் தெரியாது. ஆனால் கட்டணம் மட்டும் சாதா கட்டணத்தைவிட ஒரு ரூபாய் அதிகம்.
நீல நிறப் பலகையானால் அது சொகுசு பஸ். அதில் உட்கார இடம் கிடைக்காமல் நிற்பவருக்கு என்ன சொகுசு கிடைக்கப்போகிறதோ! அதன் முதல் ஸ்டேஜ் கட்டணம் ரு.5.00.
கலைஞர் அரசின் பரிசு ஏ.சி. பஸ். இதன் சிறப்பு குளு குளுவென்று இருப்பது. அதன் முதல் ஸ்டேஜ் கட்டணம் 10 ரூபாய். அதிகபட்சமாக 63 ரூபாய் வரை உள்ளது. ஆனால் பாவம் 75 லட்சம் மதிப்புள்ள ஏ.சி வால்வோ பஸ்கள் வசூல் ஒருநாள் இலக்கான ரூ.18 ஆயிரம் எட்ட முடியாமல் நஷ்டத்தில் ஓடுகின்றனவாம்.
அரசு பேருந்தில் மொத்தம் தினந்தோறும் 43.55 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். இதில் 70 சதவீதத்தினர் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான். அவர்கள் இவ்வளவு கட்டணத்தில் குளு குளு ப°சில் பயணம் செய்ய இயலாதவர்கள். அவர்களுக்கு வாய்த்ததெல்லாம், வியர்வையில் நெருக்கித் தள்ளுகிற, எந்த நேரத்திலும் பிக்-பாக்கெட்டுக்கு வழி வகுக்கிற சாதா ப°கள்தான். வசதியுள்ள சிலருக்காக மட்டும் ஏ.சி.ப° ஓடுமானால் ஏன் நஷ்டம் ஏற்படாது?
ஒரே தடத்தில், ஒரே வேகத்தில் செல்லும் இந்தப் பேருந்துகளில், முகப்புப் பலகையின் நிறத்தை மட்டும் மாற்றிவிட்டு, மாறுபட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுவது நியாயமா என்ற கேள்வி மக்களிடையே பரவலாக உலவி வருகின்றது. நீல நிறப்பலகையோடு சொகுசு பஸ்ஸாக ஓடும் பேருந்து, சில சமயங்களில் பச்சைப் பலகையோடு விரைவு வண்டியாகவும் அவதாரம் எடுக்கிற காட்சியைக் காணமுடியும். முன்பு மகளிருக்காகவும் பள்ளிக் குழந்தைகளுக்காகவும் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டன. இப்போது அவை என்ன ஆகின என்பது தெரியவில்லை.
கழகப் பேருந்துகளின் இந்த நிலைமைகள் குறித்துப் புலம்புகிறார்கள் பொதுமக்கள். “எந்த பஸ்சுல எவ்வளவு காசு கேப்பாங்கன்னு தெரியல. ஏறின பிறகு அந்த ஸ்டாப்புல நிக்காதுன்னு சொல்லுவாங்க. ஆதனால ஷேர் ஆட்டோவே மேல். 5 ரூபாய் கொடுத்தால் போதும், எங்க சொல்லுறமோ அங்க நிறுத்துவாங்க,” என்றார் ஒரு பயணி.
மக்கள் விரும்பியதால் சொகுசுப் பேருந்துகள் விடப்பட்டதாகக் கூறப்பட்டது. எவ்வளவோ கோரிக்கைகளைப் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் ஊர்வலமாகச் சென்று அமைச்சரிடம் மனுக்களாகக் கொடுத்தும், அக்கோரிக்கைகள் குப்பைத் தொட்டிகளுக்கே போகின்றன. ஆனால் சொகுசுப் பேருந்து வேண்டும் என்று மக்கள் கேட்டார்களாம், இவர்கள் கொடுத்தார்களாம்!
பீக் ஹவர் எனப்படும் நெருக்கடி நேரங்களில் சாதாரண பஸ்கள் கண்களில் தென்படுவதே இல்லை. சொகுசுப் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாகத் திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த மறைமுகமான, முன்னறிவிப்பு இல்லாத கட்டண உயர்வு என்பது பயணிகளிடமிருந்து சட்டப்பூர்வமாக பிக்-பாக்கெட் அடிக்கிற வேலை அல்லவா?
கடும் போகுவரத்து நெருக்கடி உள்ள சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல், நல்ல சாலைகளை உருவாக்காமல் செகுசு பஸ்கள் என்ற பெயரில் உயர்கட்டணம் வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம்? இவர்கள் கொண்டு வந்த இந்த சொகுசு பஸ்கள் ஒரே ஆண்டில் டப்பா பஸ்களாக மாறிவிட்டன. அதனை இப்போது ‘எம்’ சர்வீசாக பயன்படுத்துகின்றனர்.
இப்படிப்பட்ட கட்டண கொள்ளைகளும் குழப்பங்களும்தான் எளிய மக்களை அவர்களுக்கான அரசுப் போக்குவரத்து சேவையிலிருந்து அந்நியப்படுத்துகின்றன. மக்களின் கோபம் என்னவோ போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மீதுதான் பாய்கிறது. இது தொடர்பாக போக்குவரத்து தொழிற்ச் சங்க (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் லட்சுமணன் என்ன கூறுகிறார்?
“இப்படி கட்டணத்தை உயர்த்தியும், கூடுதல் பேருந்துகளை விட மறுத்தும், மக்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதியை செய்யாமலும் தொழிலாளர்களையும் மக்களையும் அரசு மோதவிடுகிறது. விபத்தில் சிக்குகிறவர்களுக்கு உரிய காலத்தில் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதும் இன்னொரு கொடுமை. ஆனால் விபத்துள்ளானால் விசாரணையின்றி ஒட்டுநரின் உரிமம் பறிக்கப்படுகிறது. அப்படியே தொழிலாளர் நீதிமன்றத்தில் நியாயம் கிடைத்தாலும் அதனை அமல்படுத்தமால் மேல் முறையிடு செய்யப்படும். ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஒய்வூதிய நலன்களைக் கூடத் தராமல் இழுத்தடிக்கிறார்கள்,”
“ இதிலும் கொடுமை பழுதடைந்த பஸ்களைச் சரிசெய்ய ஒரு ஒர்க் ஷாப் கூட இல்லை என்பதுதான். இது போன்ற நெருக்கடிகளை உருவாக்கி மறைமுகமாகத் தனியாரிடம் கொடுக்கும் தந்திரத்தை அரசு கையாள்கிறது,”
தினசரி போக்குவரத்தில் பயணம் செல்லக் கூடிய பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதின் காரணமாக அவரவர்கேற்ப வகையில் வாகனத்தை பயண்படுத்துகின்றனர். இதன் விளைவு போகுவரத்து நெரிசல், சுற்றுச் சூழல் மாசுபடுவதாகும். இவற்றை எல்லாம் கட்டுபடுத்த பொதுப் போக்குவரத்துதான் தீர்வு. என்றார்.
கடந்த மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலின்போது திடீரென எல்லா வகையான பேருந்துகளிலும் சாதாரணக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தலையிட்டதும் அது மாற்றப்பட்டது. அப்படியானால் அரசு மனது வைத்தால் அனைத்துப் பேருந்துகளிலும் சாதாரணக் கட்டணம் வசூலிக்க முடியும் என்பது தெரிகிறது அல்லவா? அரசு ஏன் மனது வைக்கக் கூடாது?
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் போக்குவரத்துக்கு ஒரு தலையாய பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அந்த போக்குவரத்தில் பேருந்துகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டியது அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்தான். ஆனால் தனியாரின் தான்தோன்றித்தனமான கட்டணக் கொள்ளைக்கு அல்லவா அரசு முன்மாதிரியாக இருக்கிறது! மக்களின் இந்த ஆதங்கத்தை மதித்து இனிமேலாவது அரசு குறைந்த, சீரான கட்டண விகிதங்களோடு பேருந்துகளை இயக்குமா?