Wednesday, December 30, 2009

33வது சென்னை புத்தகக் கண்காட்சி

33வது சென்னை புத்தகக் கண்காட்சி புதன்கிழமை (நேற்று) துவங்கியது. முதல்வர் கருணாநிதி புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த புத்தகக் கண்காட்சி வரும் ஜனவரி 10ம் தேதி வரை ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் (பூந்தமல்லி) நெடுஞ்சாலை பச்சையப்பன் கல்லூரி எதிரில் நடைபெறுகிறது.
இந்த புத்தகக் கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் சேது சொக்கலிங்கம், செயலாளர் ராம லட்சுமணன் பொருளாளர் எஸ்.எஸ். ஷாஜகான் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது வருமாறு:
கண்காட்சி அரங்கம் 1 லட்சத்து 75ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 5 வாயில்களுடன் 606 அரங்குகளில் 360 புத்தக நிறுவனங்கள் பங்க கொண்டு 6 கோடிக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைச் செய்யப்படுகின்றன.
கண்காட்சி நாள்தோறும் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் இந்த கண்காட்சி நடைபெறும். நுழைவுக் கட்டணம் ரூ. 5 நுழைவு வாயில்களிலும் டிக்கெட் கவுண்டர் உள்ளது. மாணவர்களுக்கு இலவச அனுமதி சென்னை மற்றும் சுற்றுப்பகுதி பள்ளி மாணவர்களுக்காக 5 லட்சம் இலவச அனுமதி டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
நாள் தோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் 6 மண முதல் 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், இலக்கிய சொற்பொழிவுகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
பள்ளி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் ஜன-7ம் தேதி புரசைவாக்கம் அழகப்பா மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கூட மாணவர்களுக்கும், ஜன-8ம் தேதி ராணிமேரி கல்லூரி மாணவர்களுக்கும் பேச்சுபோட்டி நடத்தி ரூபாய் 1000 முதல் ரூபாய் 5,000 வரை ரொக்கம், மாணவர்கள் விரும்பும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும். அதேபோல 9ம் தேதி புத்தகக்காட்சி வளாகத்தில் 6 முதல் 13 வயது மாணவர்களுக்கு 3 பிரிவுகளில் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
கண்காட்சிக்கு வருகை தரும் வாசகர்களின் தேவையை கருத்தில் கொண்டு குடிநீர், சிற்றுண்டி, கழிப்பிட வசதிகள் என 5 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. வாசகர்கள் புத்தகங்களை வாங்க கிரெடிட் கார்டு பயன்படுத்தலாம்.
புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்களிடையே மனித நேயத்தையும் விழிப்புணர்வையும் உருவாக்க ரத்ததான முகாம். ரத்த சர்க்கரை பரிசோதனை முகாமும் நடைபெறுகிறது. 5லட்சம் சதுர அடி பரப்பளவில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கு சுமார் 10 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விருது வழங்கும் விழா:
30வது புத்தகக் கண்காட்சி நடந்தபோது, முதல்வர் கருணாநிதி நன்கொடையாக வழங்கிய ரூபாய் 1 கோடி மூலம் கிடைத்த வங்கி வருமானத்தல் அறக்கட்டளை ஒன்று தொடங்கப்பட்டது. இந்த அறக்கட்டளை வைப்புத் தொகை மூலம் கிடைத்த வட்டி வருவாயைப் பயன்படுத்தி 6 எழுத்தாளர்களுக்கு தலா ரூபாய். 1 லட்சம் பொற்கிழியுடன் பாராட்டுச் சான்றிதழும் முதல்வரால் வழங்கப்பட உள்ளது.
இந்த விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ள எழுத்தாளர்கள் வருமாறு: கட்டுரை - ச.வே. சுப்பிரமணியன், கவிதை - ஈரோடு தமிழன்பன், நாடகம் - ஆறு அழகப்பன், சிறுகதை - கு. சின்னப்ப பாரதி, தெலுங்கு இலக்கியம் - அபுரி சாயாதேவி, ஆங்கில இலக்கியம் - சோ.ந.கந்தசாமி. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் வழங்கும் பல்வேறு விருதுகளைப் பெற ஒ.ஆர்.சுரேஷ், வே.சுப்பையா, நா.தர்மராஜன்,குழ.கதிரேசன், எம்.முத்துசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-ஹேமா

1 comment:

  1. "Book Fair" article nice>>>The 6 prize winners list creats some compound discussions...For example,in the short story section Mr.Ku.Chinnappa Bharathi has been given Prize...He didnot write more short stories>>>He has written few novelsOnly...So many well establised short story writters are here to be honoured..vimalavidya

    ReplyDelete