Sunday, December 27, 2009

புலம்ப வைக்கும் போக்குவரத்து

புலம்ப வைக்கும் போக்குவரத்து
அன்றாட அவசியத் தேவையாகிவிட்ட பேருந்து போக்குவரத்து - குறிப்பாக அரசுப் போக்குவரத்து - தமிழகத்தில் எப்படி இருக்கிறது? மக்களின் அனுபவம் என்னவாக இருக்கிறது?
தமிழகத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்து, விரைவு போக்குவரத்து, கோவை கோட்டம், மதுரை கோட்டம், கும்பகோணம் கோட்டம், விழுப்புரம் கோட்டம், சேலம் கோட்டம் என ஏழு அரசு போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. அவை சார்ந்த 19 போக்குவரத்துக் கழக மண்டலங்களின் கீழ் சுமார் 20 ஆயிரம் பேருந்துகள் இயங்குகின்றன. கிட்டத்தட்ட 1,25,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஒரு நாளுக்கு 80 லட்சத்திற்கும் மேற்பட்ட கிலோ மீட்டர்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணிக்கின்றனர். நாளொன்றுக்குப் பயணக் கட்டணமாக வசூலாக அரசுக்கு 1.8 ஆயிரம் கோடி ரூபாய் வருகிறது.
விரைவுப் பேருந்துக் கட்டணம், புறநகர் பேருந்துக் கட்டணம், மாநகரப்பேருந்துக் கட்டணம், நகரப்பேருந்துக் கட்டணம் என நான்கு வகையான கட்டணங்கள் உள்ளன. இதில் எல்.எ°.எஸ், பாயிண்ட் டு பாயிண்ட், நான் ஸ்டாப் என்றெல்லாம் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. சொகுசுப் பேருந்து, தற்போது குளு குளு பேருந்து என்றும் அதிகக் கட்டணப் பேருந்துகள் ஓடுகின்றன.
இவற்றிலாவது கட்டணமுறை என்ன என்பது புரிகிறது. அப்படி எதுவுமே புரியாத ஒரு கட்டண முறையும் இருக்கிறது. அண்மையில் ஒரு பயணி சென்னை காசி தியேட்டர் நிறுத்தத்தில் ஏறி, கிண்டியில் இறங்கினார். துரிதவண்டி பேருந்து அதற்கு ரூ. 3.00 கட்டணம் என நினைத்தால் ரூ. 4.50 வசூலிக்கப்பட்டது. ஏன் என்று நடத்துனரிடம் கேட்டபோது அவர், “இது ஜம்பிங் ஸ்டாப் கணக்கு” என்று சொல்லியிருக்கிறார். சத்தியமாக ஜம்பிங் ஸ்டாப் என்றால் என்ன என்று எந்தப் பயணிக்கும் புரியவில்லை.
சென்னையில் 1947ல் அரசின் 30 நகரப் பேருந்துகள் ஓடின. 1972ல் போக்குவரத்துக்கழகம் தொடங்கப்பட்டது. அப்போது அதில் 1029 பேருந்துகள் ஓடின. 1994ல் 2332 பேருந்துகளுடன் பல்லவன் போக்குவரத்துக் கழகம், அம்பேத்கர் போக்குவரத்து கழகம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 2001ல் மீண்டும் ஒரே பெருநகரப் போகுவரத்துக் கழகமாக மாறியது.
சென்னையில் 2005ஆம் ஆண்டு மொத்தம் இருந்த 2,500 பேருந்துகளில் 1500க்கு மேற்பட்டவை சாதாரணக் கட்டண வண்டிகளாக இருந்தன. ஆனால் இன்று சென்னையில் 25 டிப்போக்களில் 3,084 பஸ்கள் உள்ளன. இவற்றில் 600 மட்டுமே சாதாரணக் கட்டண பஸ்கள். மீதியுள்ள 2,484 பஸ்களிலும் வண்ணப் வண்ண பெயர்ப் பலகைகளைக் கொண்ட எல்.எஸ்.எஸ் (350), எம். சர்வீஸ் (700), டீலக்ஸ் (850), ஏ.சி. பஸ்கள் (30) என்ற எண்ணிக்கையில் தொடங்கி 100க்கும் மேற்பட்ட ஏ.சி. ப°கள் உள்ளன. இதில் அதிகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அவற்றின் முகப்பிலுள்ள பெயர்ப்பலகைகளை வைத்துத்தான் அவற்றின் தரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். பயணம் செய்து பார்த்தால் ஒரு சில புதிய வண்டிகளைத் தவிர மற்றதில் எந்த வித்தியாசமும் தெரியாது.
அப்பலகை வெள்ளை நிறமானால் அது சாதாபஸ். முதல் ஸ்டேஜ் கட்டணம் 2 ரூபாய். ஆனால் அதைப் பார்ப்பது மிகவும் அரிது. பலகை மஞ்சள் நிறமானால், குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நிற்கும். அதற்கு எல்.எஸ்.எஸ். பஸ் என்று பெயர். அதற்கு முதல் ஸ்டேஜ் கட்டணம் ரு. 2.50. அதிகமான மக்கள் இருந்தாலும் அந்த இடத்தில் நிற்காமல் போகும், அதுதான் இதன் சிறப்பு. பச்சை நிறப்பலகையானால் அது துரித வண்டியாம். அதன் முதல் ஸ்டேஜ் கட்டணம் ரூ.3.00. சென்னை போலப் போக்குவரத்து நெரிசல் நிறைந்த மாநகரில் இது எவ்வளவு துரிதமாகப் போக முடியும் என்பது ஓட்டுநருக்கும் தெரியாத ரகசியம்.
வெள்ளைப் பலகையிலேயே (எம்) என்று எழுதியிருக்கும். அதன் அர்த்தம் யாருக்கும் தெரியாது. ஆனால் கட்டணம் மட்டும் சாதா கட்டணத்தைவிட ஒரு ரூபாய் அதிகம்.
நீல நிறப் பலகையானால் அது சொகுசு பஸ். அதில் உட்கார இடம் கிடைக்காமல் நிற்பவருக்கு என்ன சொகுசு கிடைக்கப்போகிறதோ! அதன் முதல் ஸ்டேஜ் கட்டணம் ரு.5.00.
கலைஞர் அரசின் பரிசு ஏ.சி. பஸ். இதன் சிறப்பு குளு குளுவென்று இருப்பது. அதன் முதல் ஸ்டேஜ் கட்டணம் 10 ரூபாய். அதிகபட்சமாக 63 ரூபாய் வரை உள்ளது. ஆனால் பாவம் 75 லட்சம் மதிப்புள்ள ஏ.சி வால்வோ பஸ்கள் வசூல் ஒருநாள் இலக்கான ரூ.18 ஆயிரம் எட்ட முடியாமல் நஷ்டத்தில் ஓடுகின்றனவாம்.
அரசு பேருந்தில் மொத்தம் தினந்தோறும் 43.55 லட்சம் மக்கள் பயணம் செய்கின்றனர். இதில் 70 சதவீதத்தினர் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்தான். அவர்கள் இவ்வளவு கட்டணத்தில் குளு குளு ப°சில் பயணம் செய்ய இயலாதவர்கள். அவர்களுக்கு வாய்த்ததெல்லாம், வியர்வையில் நெருக்கித் தள்ளுகிற, எந்த நேரத்திலும் பிக்-பாக்கெட்டுக்கு வழி வகுக்கிற சாதா ப°கள்தான். வசதியுள்ள சிலருக்காக மட்டும் ஏ.சி.ப° ஓடுமானால் ஏன் நஷ்டம் ஏற்படாது?
ஒரே தடத்தில், ஒரே வேகத்தில் செல்லும் இந்தப் பேருந்துகளில், முகப்புப் பலகையின் நிறத்தை மட்டும் மாற்றிவிட்டு, மாறுபட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுவது நியாயமா என்ற கேள்வி மக்களிடையே பரவலாக உலவி வருகின்றது. நீல நிறப்பலகையோடு சொகுசு பஸ்ஸாக ஓடும் பேருந்து, சில சமயங்களில் பச்சைப் பலகையோடு விரைவு வண்டியாகவும் அவதாரம் எடுக்கிற காட்சியைக் காணமுடியும். முன்பு மகளிருக்காகவும் பள்ளிக் குழந்தைகளுக்காகவும் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டன. இப்போது அவை என்ன ஆகின என்பது தெரியவில்லை.
கழகப் பேருந்துகளின் இந்த நிலைமைகள் குறித்துப் புலம்புகிறார்கள் பொதுமக்கள். “எந்த பஸ்சுல எவ்வளவு காசு கேப்பாங்கன்னு தெரியல. ஏறின பிறகு அந்த ஸ்டாப்புல நிக்காதுன்னு சொல்லுவாங்க. ஆதனால ஷேர் ஆட்டோவே மேல். 5 ரூபாய் கொடுத்தால் போதும், எங்க சொல்லுறமோ அங்க நிறுத்துவாங்க,” என்றார் ஒரு பயணி.
மக்கள் விரும்பியதால் சொகுசுப் பேருந்துகள் விடப்பட்டதாகக் கூறப்பட்டது. எவ்வளவோ கோரிக்கைகளைப் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் ஊர்வலமாகச் சென்று அமைச்சரிடம் மனுக்களாகக் கொடுத்தும், அக்கோரிக்கைகள் குப்பைத் தொட்டிகளுக்கே போகின்றன. ஆனால் சொகுசுப் பேருந்து வேண்டும் என்று மக்கள் கேட்டார்களாம், இவர்கள் கொடுத்தார்களாம்!
பீக் ஹவர் எனப்படும் நெருக்கடி நேரங்களில் சாதாரண பஸ்கள் கண்களில் தென்படுவதே இல்லை. சொகுசுப் பேருந்துகளின் எண்ணிக்கை படிப்படியாகத் திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த மறைமுகமான, முன்னறிவிப்பு இல்லாத கட்டண உயர்வு என்பது பயணிகளிடமிருந்து சட்டப்பூர்வமாக பிக்-பாக்கெட் அடிக்கிற வேலை அல்லவா?
கடும் போகுவரத்து நெருக்கடி உள்ள சென்னையின் உள்கட்டமைப்பை மேம்படுத்தாமல், நல்ல சாலைகளை உருவாக்காமல் செகுசு பஸ்கள் என்ற பெயரில் உயர்கட்டணம் வசூல் செய்வது எந்த விதத்தில் நியாயம்? இவர்கள் கொண்டு வந்த இந்த சொகுசு பஸ்கள் ஒரே ஆண்டில் டப்பா பஸ்களாக மாறிவிட்டன. அதனை இப்போது ‘எம்’ சர்வீசாக பயன்படுத்துகின்றனர்.
இப்படிப்பட்ட கட்டண கொள்ளைகளும் குழப்பங்களும்தான் எளிய மக்களை அவர்களுக்கான அரசுப் போக்குவரத்து சேவையிலிருந்து அந்நியப்படுத்துகின்றன. மக்களின் கோபம் என்னவோ போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மீதுதான் பாய்கிறது. இது தொடர்பாக போக்குவரத்து தொழிற்ச் சங்க (ஏஐடியுசி) பொதுச் செயலாளர் லட்சுமணன் என்ன கூறுகிறார்?
“இப்படி கட்டணத்தை உயர்த்தியும், கூடுதல் பேருந்துகளை விட மறுத்தும், மக்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வசதியை செய்யாமலும் தொழிலாளர்களையும் மக்களையும் அரசு மோதவிடுகிறது. விபத்தில் சிக்குகிறவர்களுக்கு உரிய காலத்தில் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதும் இன்னொரு கொடுமை. ஆனால் விபத்துள்ளானால் விசாரணையின்றி ஒட்டுநரின் உரிமம் பறிக்கப்படுகிறது. அப்படியே தொழிலாளர் நீதிமன்றத்தில் நியாயம் கிடைத்தாலும் அதனை அமல்படுத்தமால் மேல் முறையிடு செய்யப்படும். ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஒய்வூதிய நலன்களைக் கூடத் தராமல் இழுத்தடிக்கிறார்கள்,”
“ இதிலும் கொடுமை பழுதடைந்த பஸ்களைச் சரிசெய்ய ஒரு ஒர்க் ஷாப் கூட இல்லை என்பதுதான். இது போன்ற நெருக்கடிகளை உருவாக்கி மறைமுகமாகத் தனியாரிடம் கொடுக்கும் தந்திரத்தை அரசு கையாள்கிறது,”
தினசரி போக்குவரத்தில் பயணம் செல்லக் கூடிய பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதின் காரணமாக அவரவர்கேற்ப வகையில் வாகனத்தை பயண்படுத்துகின்றனர். இதன் விளைவு போகுவரத்து நெரிசல், சுற்றுச் சூழல் மாசுபடுவதாகும். இவற்றை எல்லாம் கட்டுபடுத்த பொதுப் போக்குவரத்துதான் தீர்வு. என்றார்.
கடந்த மே மாதம் நாடாளுமன்றத் தேர்தலின்போது திடீரென எல்லா வகையான பேருந்துகளிலும் சாதாரணக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தலையிட்டதும் அது மாற்றப்பட்டது. அப்படியானால் அரசு மனது வைத்தால் அனைத்துப் பேருந்துகளிலும் சாதாரணக் கட்டணம் வசூலிக்க முடியும் என்பது தெரிகிறது அல்லவா? அரசு ஏன் மனது வைக்கக் கூடாது?
ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் போக்குவரத்துக்கு ஒரு தலையாய பங்கு இருக்கிறது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள். அந்த போக்குவரத்தில் பேருந்துகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதில் ஒரு நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டியது அரசுப் போக்குவரத்துக் கழகங்கள்தான். ஆனால் தனியாரின் தான்தோன்றித்தனமான கட்டணக் கொள்ளைக்கு அல்லவா அரசு முன்மாதிரியாக இருக்கிறது! மக்களின் இந்த ஆதங்கத்தை மதித்து இனிமேலாவது அரசு குறைந்த, சீரான கட்டண விகிதங்களோடு பேருந்துகளை இயக்குமா?

1 comment:

  1. The govt itself cheating the people who are traveliing daily in the state run Buses by collecting and fixing various types of charges.The worst conditioned buses were not at all changed so far---vimalavidya

    ReplyDelete